மாசி கருவாட்டின் மருந்துவ மகத்துவம் !

நவம்பர் 12, 2018 மாலை மலர் பத்திரிகை வெளியீடு
டாக்டர் கே.பி அர்ச்சுனன்
தலைவர், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம்


நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும், அந்தந்த இடத்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உணவுகள் உண்டு. பொதுவாக அனைவருக்கும் ஏற்ற உணவுகள் வரையறுக்கப்பட்டதாகும். அவற்றின் அறுசுவையை இலக்கணப்படுத்தி, அதிலே சித்த மருத்துவ முறைப்படி உணவுகள் வகுக்கப்பட்டது. இப்படி வகுக்கப்பட்ட உணவுகள் கீரையில் ஆரம்பித்து மீன்கள் வரை அடங்கும்.நாம் உணவுகளை எப்படி சமைக்க வேண்டும், உண்ண வேண்டும், எவ்வாறு உண்டால், என்னென்ன பலன் தரும் என்பதை நம் முன்னோர்கள் வகுத்து தொகுத்து அதற்கு சமையல் கலை என்கிற பெயர் சூட்டி, அதனை கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும், நாய் தோல்களிலும், மரப்பட்டைகளிலும் பொறித்து வைத்தனர்.

இப்படி வகுக்கப்பட்டதில் அன்றாட உணவில் கூழ், களி, மற்றும் நீராகாரம் என்பது தற்போது மறைந்து விட்டது. இந்த நீராகாரம் என்பது நிசித் தண்ணீர் என்றும் அழைக்கப்பட்டது. நிசி என்றால் பிராணன், தூக்கத்தில் உண்டாகும் பிராணன் ஆகும். இரவு அரிசி சாதத்தை ஆற வைத்து, சுடுதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அந்த கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் கால் பகுதி சாதமும், கால்பகுதி சுட வைத்து ஆற வைத்த தண்ணீரும் ஊற்றி, அரைப்பகுதி வெற்றிடமாக விட்டு, பாத்திரத்துக்கு மேலே மூடி விடுவார்கள்.

இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, அதிகாலையில் அந்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு உப்பு போட்டு, கலக்கி குடிக்க வேண்டும். இது மனிதனின் 5 குடல்களையும் சரி செய்து, பசியை உண்டாக்கும். அப்படி உண்டாக்கிய பிறகு, நமக்கு தேவையான எந்தவித உணவையும் உண்ணலாம். அப்படி பசி உண்டாக்கும். இந்த தண்ணீர் முழு ஆரோக்கியத்தை தரும். சீரண மண்டலத்தை சீர் செய்யும். நமது உடலில் 7 விதமான தாதுக்கள் உள்ளது. இந்த 7 வித தாதுக்களில் ஒவ்வொரு தாதுவில் ஒவ்வொரு உணவாக சாப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் அறுசுவை உணவு.

இந்த அறுசுவை என்பது உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவை. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது அதை ஒரே மாதிரியாக தயாரித்து உண்ணாமல், பலவிதமாக தயாரித்து உண்ணுகிறோம். கறி வகைகள், மீன் வகைகள், உணவில் சேர்த்து கொள்ளலாம்..!